பெண்களின் வறுமைக்கான
கட்டமைப்பு வேர்கள்
—எஸ். சுப்புலக்ஷ்மி
“ மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” இந்த வார்த்தைகள் செவிக்கு இனிதாய் இருந்தாலும் இயல்பு வாழ்க்கையில் பொருந்தாத ஒன்று. பெரும்பாலன பெண்கள் இந்த மாதவத்தை விரும்புவதில்லை, அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வறுமை முக்கிய காரணம். ஒரு குடும்பம் செழித்திருந்தாலும் பெண் தான் அனுபவிக்கிறாள் , ஒரு குடும்பம் வறுமையால் வாடினாலும் அதை பெண்தான் அனுபவிக்கிறாள். ஒரு பெண் வறுமையில் சுழல்கிறாள் என்றால் அதன் வேர்களை நாம் பார்ப்பதில்லை, வெளிப்புறத்திலிருந்து பார்த்துவிட்டு கொஞ்சம் பரிதாப அலையயை வீசிவிட்டு நகர்ந்து போகிறவர்கள்தான் அதிகம். அவள் ஏன் வறுமையில் இருக்கிறாள் அதை எவ்வாறு ஒழிப்பது என்று யாரும் இறங்குவதில்லை. அவளுக்கு சிறிது உணவோ உடையோ வாங்கி குடுத்துவிட்டு பெருமிதத்துடன் உலகம் நகர்கிறது, இன்று உதவி செய்யலாம் , உணவும் உடையும் தற்காலிகமானதே, நாளைக்கு அவள் என்ன செய்வாள் என்று மனம் பதைபதைக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்.
எனக்கு தெரிந்த எவ்வளோவோ பெண்கள் வறுமையில் பிறந்து வறுமையாலேயே இறந்திருக்கிறார்கள், கணவன் குடிகாரனாக அமைந்து விட்டால் இன்னும் கொடுமை. எவ்வளோவோ திறமை தனக்குள்ளிருந்தும் தன கணவனின் சொல் கேட்டு அடங்கி போகிறாள். ஆணாதிக்கம் மிக்க சமுதாயத்தில் அவளை வேளைக்கு செல்லவும் அனுமதிப்பதில்லை ” பொட்டச்சி சம்பாரிச்சுதான் இந்த குடும்பம் நடக்கணுமா ” என்ற வீண் மண்டை கனம். வறுமையான குடும்பத்தில் பிறக்கும் பெண் வறுமைக்கு பயந்து ஒடுங்கி மறுபடியும் வறுமைக்கே பலியாகிறாள், ஏன் அந்த குடும்பத்தில் வறுமை என்று யோசிக்கிறோமா , அப்படி யோசிப்பவர்கள் மிகவும் குறைவு , உதவி செய்ய விழைகிறவர்கள் கூட தற்காலிக உதவிதான்
செய்கிறார்களே தவிர வறுமையை வேரோடு பிடுங்கி எரிய மறுக்கிறார்கள், ஒரு இள வயது பெண் வறுமையில் வாடினால் அவளுக்கு படிப்பிற்கு உதவி செய்யுங்கள் , படிப்பு அவளை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும், படிப்பின் சுவையை அவள் உணரட்டும், அவள் படிப்பு முடியும் வரை அவள் உணவிற்கும் உதவுங்கள், ஆரோக்யமான பெண்ணால் வலிமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
வறுமை ஏன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பெண்கள் மத்தியில் ? யோசித்தோமா , இதற்கு தீர்வு இளைய சமுதாயத்தினரை தேர்ந்தெடுங்கள் , வறுமையை பற்றி பேசி கொண்டே இருக்க கூடாது என்று அறிவுறுத்துங்கள் , எண்ணங்களை மாற்றுங்கள், உறுதியாக பெண்ணினம் சக்தி பெறும்.
பெண்கள் தினத்தன்று மட்டும் கொண்டாடப்பட வேண்டியவள் அல்ல பெண், அன்றாடம் போற்றப்பட வேண்டியவள். நுனிபுல்லாக பெண்களின் வறுமையை பார்க்காமல் ஆழமாக பார்த்து அந்த வேர்களை பிடுங்கி எறிவோம் , செழிப்பான சமுதாயத்தை உருவாக்குவோம் !
வறுமையிலும் நம் தங்கைகள் சிறப்பான மதிப்பெண் எடுக்கிறார்கள், பஞ்சு மெத்தையில் படுத்து சொகுசு வாழ்க்கையில் படித்த பெண்களை விட அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள் , ஆனால் அதற்கு பின் அவர்களின் வாழ்க்கை எங்கே போகிறது ? அறிவோமா என்றால் இல்லை என்ற பதிலே பொருந்தும். ஊடகங்களும் அவர்களை காட்சி பொருளாக்கி , வறுமையான வீட்டையும் , நலிந்த பெற்றோர்களையும் காட்டி நம்மளை வை பிளக்க வைக்கின்றன . அதோடு அந்த செய்தி முடிந்துவிடும் அதை பார்த்து சிலர் உதவுவார்கள் , படிப்பு செலவை நானே ஏற்கிறேன் , அவள் படித்து முடித்துவிட்டால் வறுமை ஒழிவது உறுதி அண்ணல் படித்து முடிக்கணுமே , உதவ முன் வருபவர்கள் படிப்புக்கு உதவுவார்கள் அவளின் மூன்று வேலை உணவுக்கு யார் உதவுவார்கள், குடிகார தந்தை தாய் ஈட்டும் சிறிது பணத்தையும் பறித்து விடுகிறான், ஒரு கட்டத்தில் உடல் நிலை சரியில்லாமல் படுத்து விடுகிறான் , கூட பிறந்தவர்களை யார் கவனிப்பது, தந்தையின் மருத்துவ செலவுக்கு என்ன செய்வது, இப்படி பட்ட சூழ்நிலையில் ஒரு பெண்ணால் மனது ஒன்றி எப்படி படிப்பை தொடர முடியும், தாய்க்கு துணையாக தானும் வேளைக்கு செல்ல முடிவெடுக்கிறாள் , இப்படித்தான் செல்கிறது இள வயது வறுமை. அன்றே அவ்வை சொன்னாள் ” கொடிது கொடிது வறுமை கொடிது , அதனிலும் கொடிது இளமையில் வறுமை” பல பெண்கள் அதை தான் அனுபவித்து வருகிறார்கள். வறுமையின் வேர்களை அறுக்க வேண்டுமென்றால் விசாலமான பார்வை தேவை, தற்காலிக உதவிகள் செய்வதை விடுத்து ஆழமான உதவிகளை செய்து பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையை வேரறுப்போம்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” எத்துணை பேர் இதை சரி என்பார்கள், மேடை பேச்சுக்கும் , பெருமை பேச்சுக்கும் இது சரி வருமே தவிர நடைமுறை வாழ்க்கையில் முடியாத ஒன்று, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எவ்வளவு , சரி வீட்டில் வறுமை வெளியே வந்து சம்பாதித்து குடும்பத்தை உயர்த்தலாம் என்றால் இந்த சமுதாயம் அவளை புரட்டி போடுகிறது , பல சோதனைகளை அவள் சந்திக்க நேரிடுகிறது, அவமான படுத்த படுகிறாள் , அவளின் பலவீனத்தை , அன்பான உள்ளத்தை கூறு போடுகிறது, இத்தனையும் தாண்டி அவள் முன்னேறுகிறாள் என்றால் பாரதி கனவு கண்ட புதுமை பெண் அவள்தான், கொடுமை என்னவென்றால் அந்த புதுமை பெண்கள் அடிக்கடி பூப்பதில்லை. வேறு வழி இல்லாமல் கிடைக்கும் கூலி வேலையை செய்து கொண்டு மறுபடியும் அதே வறுமை, இப்படி சொல்லி கொண்டே போகலாம். வறுமை அரக்கனை பெண்களின் பாதையிலிருந்து நசுக்கி விட்டால் வளமான அழகான உலகம் அமைவது உறுதி.