பெண்களின் வறுமைக்கான கட்டமைப்பு வேர்கள்
~ ர.மேனு
இன்றைய காலக்கட்டத்தில் கொடிய நோயினால் இறப்போரை விட அதிகமாக வறுமையினாலேயே இறக்கின்றனர். வறுமை எனும் மாபெரும் கொடிய நோயினால் பாதிக்கப்படுவது அதிகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலேயே .வறுமை என்பது அடிப்படை தேவைகளான “உணவு, நீர், உறையுள், கல்வி, சுகாதாரம் மற்றும் முறையான கழிவகற்றும் வசதிகள் ” என்பன பூரணமாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் வறுமை என்றும் மற்றும் “நாளாந்த வருமானம் $ 1.25 விட கீழ் நிலையில் இருந்தால் வறுமை” எனவும் வறுமைக்கு பல வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் அக்டோபர் 17 ஆம் திகதி உலக வறுமை ஒழிப்பு தினமாக ஐ.நா சபையினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது .
1950,1960 காலக்கட்டத்தில் “பசுமைப்புரட்சி “ஏற்பட்டது. உலக நாடுகளில் ஏற்பட்ட வறுமை சூழ்நிலையினை குறைப்பதற்காகவே இந்த பசுமைப்புரட்சி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பசுமைப்புரட்சியின் விளைவினாலே இன்று வறுமை சூழல் நிலவிவருகிறது. காரணம் உலகம் முழுவதும் உலகமயமாக்கப்பட்டு வருகிறது . நவீனமயமாக்கப்பட்டமையால் தேவைகள் அதிகரித்து வருகிறது. மற்றும் அளவுக்கு அதிகமான வளங்களை பயன்படுத்தி வருகின்றனர். மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்நாட்டுப் பாவனையாளர்களுக்கு கிடைப்பதில்லை. அவை முழுமையாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த காரணங்களினாலேயே உள்நாட்டில் வறுமை ஏற்படுகிறது. அந்த வகையில் நான் வாழும் இலங்கை நாட்டில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் மற்றும் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகமாக வறுமையினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மற்றும் கிராமபுறங்களிலும், நகர்ப்புற சேரிகளிலும் வாழ்கின்ற மக்கள் வறுமையின் உச்சக்கட்டத்தில் காணப்படுகிறார்கள். அத்துடன் பசி ,பட்டினியால் தினம் தினம் இறக்கின்றார்கள்.
வறுமை அடித்தளத்தில் பெண்களின் மீதே தாக்கத்தை செலுத்துகிறது .எடுத்துக்காட்டாக இயற்கை அனர்த்தம், வீதி விபத்தில் கணவனை இழந்தோர் ,கணவனால் கைவிடப்பட்டவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் ,மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்களின் குடும்பத்தில் பெண்களே தமது குடும்பத்தை தலைமை தாங்குகின்றார்கள். இந்த சூழ்நிலையில் வறுமை பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்கள், ஊனமுற்றவர்கள் உள்ள குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் வறுமை கோரத்தாண்டவம் ஆடுகின்றது.
வேலையின்மை பிரச்சினையும் வறுமைக்கு முக்கிய காரணம். வேலைவாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் தாழ்வு நிலையில் இருக்கிறது. இவ்வேலையின்மை காரணத்தால் வறுமையினைப் போக்குவதற்காக பெண்கள் “வீட்டுவேலைத் தொழிலாளர்களாக” வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றார்கள். உதாரணமாக மத்திய கிழக்கு நாடுகள். இவர்கள் வீட்டுத்வேலைத் தொழிலுக்கு செல்வதால் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது. சமூகரீதியில் பல்வேறு இன்னல்கள், குடும்பங்கள் இடையே பிணக்குகள், பிள்ளைகள் ஆதரவற்றுப்போதல், கணவர் மறுமணம் செய்தல் என பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் வன்கொடுமை, சம்பளம் முறையாகக் கொடுக்காமை, அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம், அடிமையாக நடத்துதல் என்று இவர்கள் உடல், உளரீதியான பிரச்சினைகளை அனுபவிக்கின்றார்கள். பெண்கள் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முக்கிய காரணம் வறுமை. இது தாக்கம் செலுத்தாவிடில் பெண்கள் இவ்வாறான வன்முறைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்காது.
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் வாழ்வாதாரம் குறைவாகவே காணப்படும். பெண்களுக்கான முறையான வேலைவாய்ப்பு இல்லை. இவர்கள் கூலி வேலை செய்வார்கள் எனின் ஆண்களை விட குறைவாகவே ஊதியம் கூறுகின்றார்கள். ஏனென்றால் ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்களாம். மற்றும் ஆணுக்கு நிகராக பெண் வேலை செய்ய முடியாதாம் என ஆணாதிக்க சமூகத்தின் கூற்றுக்கு இணங்க குறைவான சம்பளம் பெறுகின்றனர். அதற்கேற்றவாறு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனை வேண்டி உண்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் பசியும் பட்டினியுடனும் இருக்க வேண்டியநிலை ஏற்படுகிறது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நாம் இன்று வரை எதிர்கொள்கின்ற மாபெரும் பிரச்சினை “COVID 19″எனும் வைரசின் இன் தாக்கம். இவ் நோயினால் இறப்பவர்களோடு, வறுமையினாலும் மக்கள் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஊர்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடந்தார்கள், உண்பதற்கு உணவு இல்லாமல், குடிக்க தண்ணீர்கூட இல்லாமல், வேண்டி உண்பதற்கு பணம் இல்லாமல் அத்தோடு விலைவாசியும் வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போனது. பணம் உள்ளவர்கள் கொரோணா விடுமுறையை சந்தோசமாக கொண்டாடினார்கள். ஆனால் பணம் இல்லாதவர்கள் உண்ண உணவு இல்லாமல் தினம் தினம் திண்டாடினர்கள்.
வறுமையும் நமது சமூகம் போன்று எண்ணத்தைக்கொண்டுள்ளது. ஏனென்றால் அதுவும் தனது உக்கிரத்தனத்தினை தாழ்த்தப்பட்டவர்கள் மீதே காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தில் வாழக்கூடாது என்று சமூகம் நினைப்பதை போலவே வறுமையும் தாழ்த்தப்பட்டவர்களை அளழிக்கின்றது. கல்வி அறிவும் வறுமைக்கான காரணங்களில் செல்வாக்கு செலுத்துகின்றது. பெண்களுக்கு முழுமையாக கல்வி கற்கும் உரிமையினை கொடுக்கவில்லை. பெண்கள், ஆணாதிக்க கட்டமைப்பின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பின் கணவனால் பாலியல் ரீதியான வன்முறைகள் செய்யப்படுகின்றது. அதிக குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். ஆனால் அக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் போகின்றது. ஏனென்றால் வறுமையினால் போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை.
இஸ்லாம் மதத்தினை காரணமாக காட்டி பல தார திருமணம் செய்கின்றார்கள். பின்னர் மனைவிமார்களை சமமாக வைத்துப் பார்க்க முடியவில்லை என்று அவர்களை விட்டு விலகிக் செல்கிறார்கள். இதனால் அந்த பெண்ணும் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களால் வாழ்வாதாரத்தை பெற முடியாமல் வறுமையினால் பட்டினி கிடக்க வேண்டிய நிலைமை. அதுமட்டுமின்றி கணவன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும். அதை வார்த்தைகளால் சொல்லவே தேவையில்லை. பெண்களுக்கே குடும்பத்தினரை பராமரிக்கும் பொறுப்பு இருக்கின்றமையால் வீட்டில் கிடைக்கும்குறைந்தளவானஉணவினை பகிர்ந்து கொடுத்து விட்டு எஞ்சியுள்ளதை உண்பாள். இதனால் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடு நோய்களுக்கு உள்ளாகின்றார்கள். இவ்வாறு பல காரணங்களினால் பெண்கள் வறுமையின் அடிப்படை கட்டமைப்பில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.