தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய உடை நெறி: ஓர் கருத்து பகிர்வு

Standard

By ACR Sudaroli

D78x3O2UYAEDU1a

“காலை நடைபயிற்சியின் போது கூட, நிறைய பெண்கள் சுடிதாருடன் துப்பட்டா அணிந்தே செல்கின்றனர். ஆண்கள் அரை டிரவுசர், டி ஷர்ட் அணிந்து செல்கின்றனர், அதையே ஒரு பெண் அணிந்தால், அவளை ஒரு கலாசார சீர்குலைவின் வித்தாய் நோக்கும் மனப்பான்மை பெரிதளவில் நிலவுகிறது.”

“உடை தேர்வு என்பது அவரவர் வசதி தானே”

“நான் ஒரு நாள், டி ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து கொண்டு, கடையில் பொருள் வாங்குவதற்கு சென்றேன். அப்பொழுது தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி என்னிடம், ‘ஏம்மா மேல ஒரு துண்டை போட்டு கொண்டு போம்மா’ என்றார். எனக்குள் சுள்ளென்று கோபம் எட்டி பார்த்தது ‘உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?’ என்றேன் அவரின் கண்களை உற்று நோக்கி பார்த்தப்படி. அவர் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் அவர் எப்பொழுது என்னை பார்த்தாலும், ஒன்றும் கூறுவதில்லை.”

வெள்ளிக்கிழமை (31 மே) அன்று, எங்கள் அலுவலகத்தில் நடந்த தேனீர் சமூக கூடுகையில், ‘பெண்கள் எவ்வாறு அவர்கள் மீதான சமூக பார்வையினால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று கல்லூரி மாணவிகளிடையே நடந்த  உரையாடலில் இந்த கருத்துக்களை அவர்கள் பகிர்ந்தனர்.

மறுநாள் ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் முழுவதும் திடீரென்று பெண்கள் மீது திணிக்கப்படும் உடை நெறியினை பற்றிய விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. என்னவென்று பார்த்தால், நமது தலைமை செயலர் திருமிகு கிரிஜா வைத்தியநாதன், அரசு அலுவலத்தில் பணிபுரியும் பெண்கள், ஆண்களுக்கான  உடை நெறியினை குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது தெரிய வந்தது. அவர் அதில், பெண்கள் சுடிதார் அணிந்தால், கண்டிப்பாக துப்பட்டா அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே தமிழக அரசு அலுவலகத்தில் பணிபுரியும் தோழிகள், அங்கு கடை பிடிக்கப்படும் எழுதப்படாத சட்டங்களில் பெண்களின் உடுப்பு விசயமும் ஒன்று என்று என்னிடம் கூறியுள்ளது எனக்கு ஞாபகத்தில் அலைமோதவே செய்தது. தோழிகள், இதைப்பற்றி விவரிக்கும் போது, நான் அரசு பணியாளர் இல்லை என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றே சொல்லலாம். தமிழக அரசின் புது அரசு உத்தரவில், பெண்கள் பேன்ட், சட்டை அணிய கூடாது என்று கூறவில்லை. என்னோட சந்தேகம் என்னவென்றால், அவ்வாறு பேன்ட், சட்டை அணிந்தாலும் துப்பட்டா அணிய வேண்டுமோ? இந்த உத்தரவின் மூலம், எதை சாதிக்க போதிக்க விழைகிறது அரசு?

சில வருடங்களுக்கு முன், ஒரு நல்ல நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. வேலைக்கான உத்தரவுடன், பணியாளர்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தும் உடுப்பு நெறியினையும் இணைத்து கொடுத்தனர். அதில் அங்கு வேலை செய்யும் பெண்கள் தலை முடியினை கட்டியே வர வேண்டும்; சல்வாருடன் துப்பட்டாவை இருபுறமும் pin செய்து வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதில் எதிலும் என்னால் உடன்பட முடியவில்லை. அவர்களிடம் நான் இதற்கு உடன்பட இயலாது, நீங்கள் இதை மாற்றியமைதால் நான் பணியில் சேர்கிறேன் என்றேன். அவர்கள் கலந்தாலோசித்து, அனைத்தையும் மறுபரிசீலனை செய்து, மாற்றினார்கள். நானும் பணியில் சேர்ந்தேன். அது வரை, யாரும் அந்த நெறிகளை பற்றி கேள்வியெழுப்பவில்லை, ஆதலால் அது தொடர்ந்தது; கேள்வியெழுப்பிய பின், நீக்கப்பட்டது.

அரசு அலுவலகம் என்பது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ கூடியதாகும். அங்கு கொண்டு வரப்படும் ஒவ்வொரு சட்டதிட்டங்களும் அனைவரும் பின்பற்ற கூடியதாய், அவர்களின் உரிமையை பாதிக்காத வகையில் அமைய வேண்டும். பெண்களின் அத்தனை அனுபவங்களும் ஒரு விஷயத்தையே குறிக்கிறது, “உடை என்பது ஒருவரின் உரிமை.  இவ்வாறான உடுப்பு நெறியினை ஒருவரின் மீது திணிப்பது, ஒரு வகையில் அவரின் உடலை கண்காணிப்பதே ஆகும். அது  மனித உரிமை மீறலே” இது இருபாலருக்கும் பொருந்தும்.