— சுடரொளி
‘எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம்?!’ என்பதே ‘பெண்கள் மேம்பாடு’ (Women Empowerment) என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். அதுவல்ல, Women Empowerment என்பது நன்றாக படித்து, நல்ல பணியில் சேர்ந்து முன்னேறுவது தான்.”
“பார்த்தீங்களா, இப்போ பொண்ணுங்க எல்லாம் எப்படி dress பண்ணிக்கிறாங்கன்னு. பசங்க என்னங்க பண்ணுவாங்க, இதை பார்த்து, அவங்க ஹோர்மோன்ஸ் சுரந்ததுன்னா?! அவங்களை நாம எப்படி தப்பு சொல்ல முடியும்!”
“கல்யாணம் பண்ணிக்காம, ஒரு பெண்ணால எப்படி ஒழுக்கமா வாழ முடியும்? என்னோட பொண்ணுங்க எல்லாம் நல்ல படிச்சிருக்காங்க, நல்ல வேலையில இருக்காங்க. கல்யாணம் பண்ணி, குடும்பமா செட்டில் ஆகியிருக்காங்க.”
“என்ன மாப்பிள்ளைக்கு பைக் ஓட்ட தெரியாதா? ஸ்கூட்டர் தான் ஓட்டுவாரா? அது பொம்பளைங்க ஓட்டுறது ஆச்சே!”
“ஏம்மா இந்த கூட்டத்துல வந்து நின்னுக்கிட்டு இருக்க, பெண்களுக்குன்னு தனி coach தான் இருக்கே trainல?”
“பொம்பளைங்க தண்ணி அடிக்கிறதா? அதெல்லாம் எதுக்கு பண்ணனும்? பாரு, ஸ்ரீதேவி சாகும் போது fullஆ அடிசிருந்துச்சாம்!”
இன்னும் இன்னும், பல்வேறு விதமாய், பல்வேறு கருத்துக்கள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாய், பெண்களை சுற்றியே சுழல்கிறது! சில சமயங்களில் பெண்களிடமிருந்தே, சில சமயங்களில் இதை போன்ற கருத்துக்களை கேட்கும் போது, அதன் வேதனையை என்னவென்று சொல்லுவது! படித்திருந்தும், விரிவாய் எதை பற்றியும் யோசிக்க இயலாத, அவர்களின் அறிவின்மையை என்னவென்பது! எங்கு திரும்பினாலும், ஏதாவதொரு கேள்வி, அவளின் எதையாவது பற்றி.
நில்லுங்கள்! உங்கள் கவனத்தை எங்கள் மீதே வைக்காதீர்கள். உங்களின் புதிது புதிதான கேள்விகளுக்கு தினம் தினம் பதில் கூறி, எங்கள் ஆற்றலை நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. கொஞ்சம் வழி விடுங்கள், எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ வேண்டும்!