செய்தி வெளியீடு
பாலின சமத்துவத்திற்காக வாக்களியுங்கள் – கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கான தேர்தல் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு :
சென்னை:
அடுத்த இரண்டு வாரங்களில், மே 16, 2016 அன்று நடைபெறவுள்ள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
வெளியேறிய சட்டமன்றத்தில், பெண் உறுப்பினர்களின் பங்கு அதிகபட்சம் வெறும் ஏழு (7%) சதவிகிதமாக இருந்திருக்கிறது. வரவிருக்கும் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் 227 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 31 மட்டுமே பெண்கள் – பதினான்கு சதவிகிதம் (14%) மட்டுமே. வெளிவரவிருக்கும் மற்ற கட்சிகளின் பட்டியல்கள் பாலினச் சமநிலையில் இதைவிட சிறப்பாக இருக்கும் என்பதை நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
பாலின சமத்துவம் என்பது ஒரு சமூக நிலை, ஒரு அரசியல் நிலை. இந்த சமத்துவம் இல்லாத ஜனநாயகம் முழுமையற்ற, நிறைவற்ற ஒன்றாகும். ஆனால் பாலினம் சம்பந்தமான பிரச்சினைகள் இந்திய தேர்தலின் சொல்லாட்சியில் அரிதாகவே இடம்பெறுகின்றன. அப்படி இடம்பெரும்போழுது, நம் பேச்சும் விவாதங்களும் பாதுகாப்பு குறித்த அம்சங்களை பற்றி மட்டும் இருக்கின்றன. இந்தியாவின் பழமைவாய்ந்த முற்போக்கான மற்றும் பகுத்தறிவு இயக்கங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாநில அரசியல் திகழ்கின்றது. தர்க்கரீதியாக, ஆண்-பெண் சமத்துவம் இந்த மரபின் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும்.
தேர்தல் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் பாலின சமத்துவத்துவத்தை ஒரு வழிகாட்டும் கொள்கையாக ஏற்க வேண்டும் என்று பிரக்ஞா தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துகின்றது. இதை நோக்கி, ‘பிரக்ஞா பாலின சமத்துவம் தேர்தல் சரிபார்ப்பு பட்டியல்’, என்ற பட்டியலை அரசியல் கட்சிகளுக்காகவும் வாக்காளர்களுக்காகவும் வெளியிடுகிறோம். இந்த சரிபார்ப்பு பட்டியல், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும்பொழுது எளிதாக பயன்படுத்தகூடிய ஒரு வழிகாட்டியாகவும், வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க செயல்படும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
மீண்டும் வலியுறுத்துகின்றோம்: பாலின சமத்துவம் இல்லாத ஜனநாயகம் வெறும் பொருளற்ற நிழல் ஆகும். இந்த தேர்தலில், உண்மையான ஜனநாயகத்தை வலியுறுத்துங்கள். பாலின சமத்துவத்திற்காக வாக்களியுங்கள்.
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
பிரக்ஞா அறக்கட்டளை