2019 பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி, பெண்களாகிய எங்களுக்கு, குடிமக்களாக, நாங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளிடம், எங்களுடைய குறைகளை பகிர்ந்து கொள்ளுவதற்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்கிறோம்.
சமீப காலத்தில், நமது அடிப்படை உரிமைகள் கேள்விக்குட்படுத்தப்படுள்ளது. என்ன உண்பது, எவ்வாறு வழிப்படுவது, வாழ்வது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையினை இழந்து விட்டோம். நமது அரசியலமைப்பு, அறிவியல்பூர்வமான மனநிலையை ஊக்குவிப்பது நமது கடமை என்று கூறுகிறது. ஆனால் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மீது தாக்குதல் நடக்கிறது. குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். அதே சமயம், சாதி, சமயம், பாலினம், பிராந்தியத்தின் அடிப்படையில் நமது சக குடிமக்கள் பாகுபடுத்தப்பட்டு, தாக்கப்படுவதோடு, படுகொலை செய்யப்படுகிறார்கள். இவ்வாறான தண்டிக்கும் கலாச்சாரத்தினால், அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் மேம்படுத்தப்படுகிறது.
நமது மக்களாட்சி, மக்களாகிய நாம் கேள்வி கேட்பதை தேச விரோதம் என்று எண்ணும் அரசியல் கலாச்சாரமாய் உருமாற்றம் கொண்டுள்ளதை கண்டு வருந்துகிறோம். எங்களுடைய உரிமைகள், எங்கள் சமூகத்தின் பாதுகாப்பு, எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் விட்டு செல்லும் சூழல், எங்களுடைய வருங்கால வாழ்வாதாரம் ஆகியவற்றை பற்றி நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். எங்கள் குடிமைக்கான இந்த செயல்களால், நாங்கள் தேச விரோகதிகளாக சித்தரிக்கப்படுகிறோம். பெண் மனித உரிமை பாதுகாவலர்கள், அவர்களது பணியினை செயற்படுத்துவதிற்காக, வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் வன்முறையினை எதிர்கொள்கிறார்கள்.
ஆதலால் இந்த தேர்தல், எங்களுக்கு, நாங்கள் ஒரு தேசமாக, சமமான குடிமக்களாக, எங்களுடைய நல்வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையுமாக திகழ்கிறது.
இந்தியாவின் குடிமக்களாகிய நாங்கள், இந்தியாவின் அரசமைப்பு சாசனம் மற்றும் அதன் மதிப்பீடுகளில் நம்பிக்கையும், உறுதியும் கொண்டுள்ளோம். அதில் எந்தவித சமரசமும் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. குறிப்பாக, கீழ்க்கண்ட தன்மைகளை நிலைநிறுத்துவோரையே எங்களுடைய பிரதிநிதிகளாய் ஏற்க விரும்புகிறோம்:
- அரசமைப்பு முகப்புரையின் மதிப்பீடுகளான மதச்சார்பின்மை, சமத்துவம், நீதி, உரிமை மற்றும் சகோதரத்துவம் கொண்ட தங்களது குடியிரிமையை, அனைத்து இந்தியர்களும் முழுமையாக அனுபவித்தல்;
- அதிகாரம் மற்றும் வளங்களை நியாயமான முறையில், அனைத்து கூட்டாட்சி அங்கங்களுக்கும் பரவலாக பகிர்ந்தளிக்கும் கூட்டாட்சி முறையின் சாரம் நிலைக்க வேண்டும். அவ்வகையில், மாநிலங்கள் சாராய விற்பனையின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தூண்டப்படமாட்டாது.
- சட்டத்தின் ஆட்சி, அதன் மூலம் அனைவருக்கும் சமமான நீதி கிடைத்தல்;
- அடிப்படை உரிமைகள், அதன் மூலம், குறிவைத்து தாக்கப்படுவோம் என்றில்லாமல், நாங்கள் அரசியல் ரீதியாக யோசிக்கவும், பேசவும், நம்பிக்கை கொள்ளவும், கூட்டம் கூட்டவும் இயலுதல்.
நாங்கள் பெண்கள். அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், பாலின சமன்மை மீதான தங்களது அர்ப்பணிப்பை எவ்வாறு மெய்ப்பிக்க போகிறார்கள் என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
- வேட்பாளர் பரிந்துரை மற்றும் நியமித்தலில் பாலின சமநிலை;
- பாலின மற்றும் பாலியல் சார்ந்த குற்றம் சுமத்தப்பட்டோர் வேட்பாளராக பரிந்துரையிலிருந்து நீக்கப்படுதல்;
- பெண் வெறுப்பு பேச்சினை முற்றிலுமாக சகித்து கொள்ளாமை;
- கொள்கை முடிவெடுக்கும் குழுக்கள் மற்றும் பொது பணிகளில் பெண்களை மதிப்புடனும், அர்த்தமுடனும் உள்ளடக்குதல்;
- பாலினதன்மை குறித்த கருத்துகளில் மாற்றத்தினை வலியுறுத்தும் அறிக்கைகள்.
பாலின ரீதியான பாதிப்பு, மீட்சி மற்றும் செயலாண்மையை அங்கீகரிக்கும் உங்கள் செயலே பாலின சமத்துவத்துக்கான உங்களுடைய அர்பணிப்பாகும். அவ்வாறான உங்கள் பணி, பெண்களின் கூறுரையில் பதிவிடப்படும்.
உடல் ரீதியான பாதுகாப்பு எங்களுக்கு தேவை தான். ஆனால் நீங்கள் எங்களை எவ்வாறு பாதுகாக்கிறீர்கள் என்ற உங்கள் கூற்றை நாங்கள் கேட்க விரும்பவில்லை. நாங்கள் விரும்புவது,
- பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறையை தடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை அதை சார்ந்த பணிகளுக்கு முழுமையாக உபயோகித்தல், மேலும் அதனை வெளிப்படையான முறையில் கணக்கிடுதல்.
- சாதியிடை பூசல்களால் ஏற்படும் பாலின வன்முறையினை கண்டிக்கும் சட்டம் இயற்றுதல் (கௌரவ கொலைகள்)
- குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் கட்டமைப்புகள்.
- பெண்களுக்கெதிரான வன்முறையினை சரியான முறையில் புலன்விசாரணை செய்து, காலம் தாழ்த்தாத நீதியினை வழங்குதல்;
- வன்புணர்வு கலாசாரத்தினை ஒழிப்பதற்கும், அனைவரும் சமமான நீதி கிடைப்பதற்கும் பொறுப்பேற்று கொள்ளுதல்.
எங்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமைகள் அரித்தெடுக்கப்படுவது, எங்களுக்கான சமயுரிமையிலும் தாக்கம் ஏற்படுவதை உணர்ந்து, அதில் ஆழமான அக்கறை எடுத்து கொள்கிறோம். துறை சார்ந்த மற்றும் துறைசாரா அனைத்து பணியாளர்கலும், இந்த உரிமைகளை அனுபவித்தல் வேண்டும்:
- திருமணம் மற்றும் குடும்ப சூழலை தாண்டி, தன்மானம் மற்றும் சுயமரியாதையுடனும் பணிபுரிவதற்கான உரிமைகளை வழங்குதல்;
- வெளிப்படைத்தன்மையுடைய குறை தீர்க்கும் நெறிகளை கொண்டு பாதுகாப்பான, மனிதத்தன்மையுடைய சமமான பணியிடத்து சூழலை அமைத்து கொடுத்தல்;
- பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான கட்டுமான வசதிகளை ஏற்படுத்துதல்;
- ஒன்று கூடி தங்களுக்குரிய நியதிகளை பெறுவதற்காக சங்கம் அமைப்பதற்கான உரிமையினை வழங்குதல்;
- வாழ்வாதாரத்திற்கான நியாமான கூலி மற்றும் சமூக பாதுகாப்பிற்கு வழிவகுத்தல்;
- அனைத்து பாலினருக்கும் சமமான பணி நிமித்த பயிற்சிகள் கிடைப்பதற்கான பாகுபாடற்ற பணியிடத்து சூழல் அமைத்து கொடுத்தல்;
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் சட்டத்தின்படி, அனைத்து பணியிடங்களும் தங்கள் பணியாளர்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்துவதை கட்டாயமாக்குதல் வேண்டும். அமைப்புசாரா நிறுவனங்களில், இந்த பொறுப்பினை உள்ளாட்சி நிர்வாகம் ஏற்றுகொள்ள வேண்டும்.
அனைத்து பணிபுரியும் பெண்களுக்கும், குறைந்தபட்ச ஊதியம், அனைவருக்கும் பொதுவான மருத்துவ அனுகூலங்கள், தாய்மை மற்றும் குழந்தை நலம் பேணுவதற்கு ஏற்ற கட்டமைப்பு கிடைத்தல் வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்படுவதை நாங்கள் காண வேண்டும். சுதந்திரமான, அரசியல் கட்சிசாரா தொழிற்சங்கங்களின் பிரதிநிதிதத்துவத்தோடு, இந்த வாரியங்கள், உரிமம் வழங்குதல், படி, சலுகைகள் மற்றும் குறை நிவர்த்தி செய்யும் முறைகளையும் மேற்பார்வையிடுதல் வேண்டும்.
குடிமக்களாகிய, பெண்களாகிய எங்களுக்கு, இந்த தேர்தல் மிகவும் முக்கியயமானது. எங்களுக்கு விருப்பமான இந்தியாவை பற்றி தெளிவாக உள்ளோம். வேட்பாளராக, உங்களது செயல்கள் மற்றும் தெரிவுகளின் மூலம், அரசியல் சாசனம் மீதான உங்களது அர்பணிப்பை நிருபித்து காண்பிக்க உங்களை தூண்டுகிறோம்.
***
இந்த அறிக்கை, பெண் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பிரக்ஞா குழுவினரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, 2017-19ல் நிகழ்ந்த பெண்கள் கலந்தாய்வினை அடிப்படையாக கொண்டுள்ளது http://prajnya.in/women-and-work http://prajnya.in/storage/app/media/NNNU%20Penngal%20Koottamaippu%20Charter.pdf மற்றும் பிரக்ஞா பாலின சமத்துவ பட்டியலிருந்து பெறப்பட்டுள்ளது. https://keepingcount.wordpress.com/2019/01/10/prajnya-gen
04/04/2019